Tuesday 7 July 2015

Badri Kedar Yatra by SK



                                   


                             

                                        
பத்ரி கேதார் யாத்திரை

சைவமும் வைணவமும் ஒன்றுதான் . இறைவனை அடையும் வெவ்வேறு மார்க்கங்கள் தான் இவை என்பதை தெள்ளத் தெளிவாக புலப்படுத்தும் தலங்கள் தான் ஸ்ரீ பத்ரிநாத் ஸ்ரீ கேதார்நாத். இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களுக்கு இடையே  அமைந்துள்ளன இந்த இரு புண்ணிய தலங்கள் .

பத்ரி நாத் கோயில் பற்றி வழங்கப்படும் வரலாறு சுவையானது.ஆதி காலத்தில் சிவ பெருமானும்  உமையம்மையும் இந்த மலைப் பகுதியில் தான் வசித்து வந்தார்களாம். ஒரு முறை ஐயனும் அம்மையும் வெந்நீர் ஊற்றில் குளித்து விட்டு வந்தபோது ஒரு சிறு  குழந்தை  வாயிலில் அழுது கொண்டிருந்ததைக் கண்டார்களாம் . சேய் அழுவதைக் காண எந்தத் தாயும் பொறுப்பாளா? ஜகன் மாதாவாயிற்றே!அள்ளி அணைக்கத் துடித்தாள் .தடுத்தார் சிவ பெருமான். எதோ மாயச் செயல் இது. இந்தக் குழந்தை எப்படி இங்கே வந்தது? தாய் தந்தை காலடிச் சுவடு எதுவும் தென்படவில்லையே என்று வினவினார். அனைவரையும் படைத்த இறைவனுக்கா தெரியாது வந்திருப்பது யாரென்று.  பொருட்படுத்தாது குழந்தையை அள்ளிக் கொண்ட உமையம்மை அதற்கு பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தாள். ஒரு முறை ஈசனும் அம்மையும்  வெளியில் உலவச் சென்றிருந்த போது சின்னஞ் சிறு சிசு கதவைத் தாளிட்டுக் கொண்டு விட்டதாம் . திரும்பி வந்த போது கதவு திறக்காமல் போகவே சிவ பெருமானின் அறிவுறுத்தலின் பேரில் இருவரும் அந்த இடத்தை  விட்டு அகன்று கேதார்நாத் சென்று விட்டார்களாம் .

அது சரி வந்த குழந்தை யார்? வெண்ணெய் உண்ட கள்வன்தான். ஒருமுறை தம்போதபவன் என்ற அரசன் சூரிய பகவானை நோக்கி கடும் தவம்செய்து உடலில் ஆயிரம் கவசத்தை வேண்டிப்  பெற்றானாம். தன்னை எதிர்ப்பவர் எவரும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்து ஆயிரம் ஆண்டுகள் போர் புரிந்தால் ஒரு கவசத்தை மட்டுமே உரிக்க முடியும் . அடுத்த கணம் அவர் உயிர் பிரிய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றானாம் . தம்போதபவன் சஹஸ்ர கவசன் ஆனகதை இது.பின் என்ன, ஆணவமும் அட்டகாசமும் தான். வருந்திய தேவர்கள் திருமாலைத் தஞ்சம் புகுந்தனர். ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிய தகுந்த இடத்தைத் தேடி வந்த திருமால் நீலகண்ட பர்வதத்தை அடைந்தார் . அங்கு ஈசனும் அம்மையும் ஏற்கனவே குடியிருக்கக் கண்டார். அதுதான் அவர் குழந்தையாக வந்து இடம் பிடித்துக் கொண்ட கதை. ஆயிரம் ஆண்டு காலம்  தவம் புரியும் கணவருக்கு பத்ரி மரமாக தோன்றி நிழல் அளித்தாள் திருமகள்.அதுதான் பத்ரிகாச்ரமம் தோன்றிய வரலாறு.

                       ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து ஆயிரம் ஆண்டுகள் போர் புரிந்தால் அரக்கனின்  ஒரு கவசத்தை மட்டுமே உரிக்க முடியும். பார்த்தார்  திருமால் . இரணியனை வதம் செய்த நரசிம்ம ரூபத்தின் தலையும் உடலும் நர நாராயணர்களாக மாறின. நரன் ஆயிரம் ஆண்டுகள் தவம் புரியும் நேரம் நாரணன் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் புரிந்து ஒரு கவசத்தை உரித்தார் .பின் நாரணன் தவம் செய்யும் நேரம் நரன் களம் இறங்கினார். இவ்வாறே  999 கவசங்கள் உரிக்கப்பட்டவுடன் அஞ்சிய அரக்கன் அருணனை வேண்டினான். அவர் விருப்பப்படி அடுத்த பிறவியில் எஞ்சிய ஒரு கவசத்தை பறிப்பதாக வாக்களித்தார் அண்ணல். அதுதான் அரக்கன் கர்ணனாகவும் நர நாராயணர்கள் அர்ஜுனனாகவும் கண்ணனாகவும் அவதரித்த வரலாறு. நர நாராயணர்கள் தவம் செய்த இடங்கள் இரு மலைகளாக நரபர்வதம் நாராயண பர்வதம் என்று பெயர் பெற்றுள்ளன.
முதல் நாள் :.
தில்லியிலிருந்து காலை மணி 6.45 க்கு புறப்பட்டு மணி 11.25 க்கு சதாப்தி எக்ஸ்ப்ரஸ் மூலம் ஹரித்வார் போய்ச் சேர்ந்தோம். ரயில் நிலையத்தில் காருடன் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் டிரைவர் காத்திருந்தார். அன்றைய ட்ரிப்பில் நாங்கள் இருவர் மட்டும் என்பதால் சிறிய கார் தான்.நேராக கங்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குளித்து விட்டு கிளம்பும்போது ஒரு மணி ஆகிவிட்டது .

    ரிஷிகேஷ் பத்ரிநாத் மார்க்கத்தில் 5 பிரயாகைகள் வருகின்றன. பிரயாகை என்பது நதிகள் சங்கமிக்கும் இடம். முதலில் வருவது தேவப்ரயாக் .இங்கு அலக்நந்தாவும்  பாகீரதியும் சங்கமித்து கங்கை என்றபெயரில் நதியாகப் பெருகுகிறது.பிரயாகைகளில் முன்னோர் நினைவாக எள்ளும் தண்ணீரும் இறைப்பது நம் ஹிந்துக்களின் பழக்கம். முன்னரே எள் வாங்கிக் கொண்டு போயிருந்ததால் அதைச் செய்ய முடிந்தது. முடிந்தவர்கள் மற்றும் மந்திரம் தெரிந்தவர்கள் தர்ப்பணம் கூட செய்யலாம்.



ஆறு மணி நேரம் பயணம் செய்து ருத்ரப்ரயாக் என்ற இடத்தைச்  சென்றடைந்தோம். இரண்டாவது பிரயாகை ருத்ர பிரயாக் என்றாலும் ருத்ரப்ரயாக் நகரிலிருந்து பத்ரிநாத் கேதார்நாத் இரண்டு தலங்களுக்கும் இரண்டு சாலைகள் பிரிகின்றன. கேதார்நாத் செல்லும் சாலையில்தான் ருத்ரப்ரயாகை என்ற சங்கமத் தலம் உள்ளது . திரும்பி வரும் வழியில் அதைப் பார்க்க முடியும் என்று டிரைவர் சொன்னார்.ருத்ரப்ரயாகையில் புஷ்ப கிரான்ட் என்ற ஹோட்டலில் இரவு தங்கினோம்.

இரண்டாம் நாள்
காலை 7 மணிக்கு கிளம்பி அடுத்து கர்ணப்ரயாக் சென்றடைந்தோம். இங்கு பின்டார் என்ற நதி அலக்நந்தாவுடன் கலக்கிறது.

                           

மூன்றாவது பிரயாகை நந்தப்ரயாகை . இங்கு நந்தாகினி நதி அலக்நந்தாவுடன் கலக்கிறது. நான்காவதுவிஷ்ணுப்ராயாகை. இங்கு தெளலி கங்கா என்ற நதி அலக்நந்தாவுடன் சங்கமிக்கிறது. வழியில்  அலக்நந்தாவின் நடுவில் தாரி தேவி என்ற அம்பாள் கோயில் இருக்கிறது. சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கி பாலத்தின் வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் செல்ல வேண்டும்.


2013 ஆம் ஆண்டு நீர் மின் திட்டம் அமைக்க வேண்டி இந்த கோயிலை வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்டபோதுதான்  பயங்கர வெள்ளம் வந்து பத்ரிநாத் கேதார்நாத் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது என்று அங்கு வாழும் மக்கள் கூறுகிறார்கள். தாரி தேவியைத் தரிசனம் செய்து விட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் ஹனுமான் சட்டி . சாலையிலேயே செந்தூர ஹனுமான் தனது கோயிலில் காட்சியளிக்கிறார்.



பாஞ்சாலிக்காக பாரிஜாத மலரைத் தேடிச் சென்ற பீமனை வழி மறித்து தனது வாலை நகர்த்தும்படி சவால் விட்டு பின்னர் பீமனுக்கு தான் யார் என்பதை புலப்படுத்தி அவனை கட்டித் தழுவி தனது சக்தியில் பாதியை அவனுக்கு அளித்தருளிய தலம் இது என்று கூறுகிறார்கள்.

   இந்த இரண்டு கோயில்களையும் பார்த்து விட்டு இமயத்தின் இயற்கை எழிலை ரசித்துக் கொண்டு சென்ற எங்களை பத்ரிநாத்- இரண்டு கிலோமீட்டர் தொலைவு என்ற பலகை உற்சாகப்படுத்தியது. இறைவன் லீலை என்ன என்பது அப்போது எங்களுக்குப் புரியவில்லை பத்ரிநாத் கோயில் திறக்கும் அட்சய திருதியைக்கு முந்தைய தினம் தான் அந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதாம்.  சாலையின் இரண்டு பக்கங்களிலும் பெரிய பனிப்பாறைகள்.திடீர் என்று முன்சென்ற இரண்டு கார்களும் பிரேக் போட்டு நின்றன. என்ன என்று புரியாமல் அங்கு வந்த ஒருவரைக் கேட்டபோதுதான் தெரிந்தது பாதையில் ஒரு பெரிய பாறை உருண்டு விழுந்து வழியை அடைத்து விட்டது என்று. எங்களுக்குப் பின்னால் வரிசையாக கார்களும் பஸ்களும் அணிவகுத்து நின்றன. விஷயம் தெரிந்த ஒருவர் கூறினார் கீழேயிருந்து புல்டோசர் வந்து பாறையை உடைக்க வேண்டும் அல்லது அதை மலைச் சரிவில் தள்ள வேண்டும் அப்போதுதான் வண்டிகள் செல்ல முடியும் என்று. சரி,இன்று பத்ரினாதரைப் பார்க்க நமக்கு கொடுத்து வைக்கவில்லை போலிருக்கிறது என்ற வருத்தத்தில் ஆழ்ந்தோம். பார்த்தால் பின்னல் இருந்த கார்களில் இருந்து சிலர் பைகளை சுமந்து கொண்டு கால்நடையாகச் செல்வதைப் பார்த்தோம். விசாரித்ததில் விழுந்த பாறைக்கும் சாலையின் ஓரத்துக்கும் இடையே ஒருவர் செல்ல இடம் இருக்கிறது என்று தெரிந்தது. சில அவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு  எப்படியோ அந்த பாறையை பிரதட்சிணம் செய்து அந்த பக்கம் சென்று விட்டோம். அங்கு சில கார்கள் காலியாக இருந்தன. ஒரு டிரைவரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது ஆளுக்கு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு பத்ரிநாத் கோயிலருகில் கொண்டு விட ஒப்புக் கொண்டான். நாங்கள் தங்க வேண்டியிருந்த இடம் பரமார்த்த லோக் என்ற விடுதி. சின்மயா மிஷனுக்குச் சொந்தமானது. கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. அங்கு போய் செக் இன்  செய்து விட்டு கோயிலுக்கு கிளம்பினோம் மாலை ஐந்து மணி தான் இருக்கும். இருட்டிக் கொண்டு வந்து பலத்த மழைபிடித்துக் கொண்டது. பயங்கர குளிர் . ரெயின்கோட் கைவசம் இருந்ததால் அதை போட்டுக் கொண்டு கிளம்பினோம். கோயில் செல்ல அலக்நந்தா நதி மீதுள்ள பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும் , கோயிலின் நுழை வாயிலே கொள்ளை அழகு.
                                    
நுழைவதற்கு முன்பு அங்குள்ள தப்த தீர்த்தத்தில் குளித்து விட்டுச் செல்ல வேண்டும். அது கொதிக்கும்வெந்நீர் ஊற்று. பெண்களுக்கென தனி இடம் குளிக்க இருக்கிறது . ஆனால் நேராக அந்தவெந்நீரில் குளிக்க முடியாது . கொதிக்கிறது. ஏதாவது சொம்பு அல்லது மக் இருந்தால் வெந்நீரையும் குழாயில் வரும் தண்ணீரையும் விளாவி குளிக்கலாம். நாங்கள் சென்ற நேரம் மழையாக இருந்ததால் அவ்வளவு கூட்டம் இல்லை. அதுவும் அந்த நேரம் வந்து கொண்டிருந்த பக்தர்களும் பாறைக்கு அந்த பக்கம் மாட்டிக் கொண்டு இருக்கிறார்களே. ஆனந்தமான தரிசனம். சாலிகிராமத்தில்  பத்ரினாதர். ஆதி சங்கரர் கண்டெடுத்ததாம். அருகில் குபேரர், நாரதர் சுகர் , சிறிது தள்ளி நர நாராயணர் விக்ரஹங்கள். கோயிலின் முக்கிய அர்ச்சகர் நம்பூதிரி. ஆதி சங்கரர் நியமனம் செய்தவர் பரம்பரையில் வந்தவர்கள்தான் இன்றும் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். 


 பிரகாரத்தில் வெளியே வந்தவுடன் மகாலட்சுமி, உற்சவர் ஹனுமான் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு வெளியே வந்தவுடன் பிரம்ம கபால் என்ற இடத்திற்குச் சென்று அங்கு முன்னோர்களுக்கு பிண்டம் போட வேண்டும் .சிவ பெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தபோது அது விழுந்த இடம் இது எனக் கூறப்படுகிறது. இங்கு பிண்டம் போட்டால் அந்த முன்னோர்களுக்கு மறு பிறவியே கிடையாது என்றபது ஐதீகம்.


கோயிலுக்குப் போய்விட்டு வந்தவுடன் இரவு எட்டு மணிக்கு டிரைவர் கார் மற்றும் எங்கள் சாமான்களுடன் வந்து சேர்ந்தார். மனா என்ற இடத்திற்குச் செல்வது எங்கள் பயணத் திட்டத்தில் அடங்கியிருந்தது. மனா என்பது திபெத்திய எல்லை அருகேயுள்ள கிராமம் இங்குதான் சரஸ்வதி நதிஒரு பாறையிலிருந்து பெருகி வருகிறது. வியாச மகரிஷி மகாபாரதம் எழுதிய குகை வியாஸ் குஃபா என்ற பெயரில் வழங்கி வருகிறது. ஆனால் போகும் வழி பனி மற்றும் சேறு நிரம்பியிருந்ததால் எங்களால் போக முடியவில்லை .


மூன்றாம் நாள்
மறுநாள் காலை ஏழு மணிக்குக் கிளம்பி கேதார்நாத் புறப்பட்டோம். வழியில் ஜோஷிமத் என்ற இடத்தில் சங்கர மடம் உள்ளது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த மடம் இது. சிருங்கேரி காஞ்சி சங்கர மடங்கள் போல் அவ்வளவு பெரிதாக இல்லை. முதல் மாடியில் ஒரு கூடம். சிகப்பு கம்பளம் விரித்துள்ளது. அங்கு ஆதிசங்கரர் அமர்ந்த ஆசனம் புலித்தோல் போர்த்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு சின்ன பூஜை அறை. அங்குதான் சந்திர மௌலீச்வரர் ஸ்படிக லிங்க வடிவில் அருள் புரிகிறார். 



எங்கள் அதிர்ஷ்டம்  சங்கராச்சார்யா சுவாமிகள் முந்தைய தினம்தான் அங்கு வந்தாராம் அடுத்த நாள் கிளம்பவிருக்கிறார் என்று சொன்னார்கள். அவர் பத்ரிநாத் ஜோஷிமத், ஹரித்வார் த்வாரகா என்று பயணம் செய்து கொண்டே இருப்பாராம் சுவாமிகளுக்கு  92 வயது. அவரை வணங்கி விட்டு புறப்பட்டோம். 5 மணி நேரம்  மரங்கள் அடர்ந்த வனப்பாதை வழியாகச் சென்று குப்தகாசியை அடைந்தோம். இதுதான் கேதார்நாத் மலைப் பயணத்திற்கான அடிவார முகாம். எங்களுக்கு  ரிசர்வ் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ந்யூவிஸ்வநாத். அறையில் சாமான்களை வைத்து விட்டு பயோமெட்ரிக்ஸ் மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக புறப்பட்டோம். 2013 வெள்ளத்திற்குப் பிறகு மாநில அரசு, பத்ரி கேதார் பயணம் செல்பவர்களுக்கு இதைக் கட்டாயமாக்கியுள்ளது.

பதிவு செய்யும் மையத்திற்கு சென்று பார்த்தால் ஹனுமார் வால் போன்று நீண்ட க்யூ வரிசை. பயோமெட்ரிக்ஸ் 5 நிமிடங்களில் முடிந்து விட்டது. ஆனால் மருத்துவ சோதனைக்குத்தான் வரிசை. எங்கள்  எண் வந்தவுடன் டாக்டர் கேட்ட இரண்டே கேள்விகள் கணவர் அல்லது தந்தை பெயர் மருந்து எதுவும் தினசரி சாப்பிடுகிறோமா என்ற விவரம். அவ்வளவுதான் ஸ்டாம்ப் அடித்து சான்றிதழ் கொடுத்துவிடுகிறார்கள். இதற்குத் தான் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.


நான்காம் நாள்
காலை 5 மணிக்கே எழுந்து குளித்து தயாராகி  15 கிலோமீட்டர் தொலைவில் ஃபடா என்ற இடத்தில் உள்ள ஹெலிபெடுக்குப் புறப்பட்டோம். யூடி ஏர் என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிபேட் இது. பயணிகளையும் எடை போட்டு பின்னர்தான் போர்டிங் பாஸ் தருகிறார்கள். குண்டாக இருப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமாம். ஒரு ட்ரிப்பில் 5பேர் பயணம் செய்யலாம் . எட்டே நிமிடங்களில் கேதார்நாத் ஹெலிபேட் போய் இறக்கி விடுகிறார்கள் .நடைப் பயணமாக வருபவர்கள் 18 கிலோ மீட்டர் மலைப் பாதையில் நடந்து வர குறைந்தது ஐந்து மணி நேரமாவது  ஆகும்.

  


ஹெலிபேடிலிருந்து கோயில் வரை ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும் . அதுவும் ஏற்றமான பாதை. கோயில் பக்க வாட்டில் உள்ள அலுவலகத்தில் முன்னுரிமை  தரிசனம் என்று ஒரு நபருக்கு 1100 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். கோயிலின் பக்கவாட்டில் ஒரு கதவு வழியாக உள்ளே விடுகிறார்கள்.




ஆனால் தர்ம தரிசனம் முன்னுரிமை தரிசனம் இரண்டு வரிசைகளையும் பிரிப்பது ஒரு கயிறுதான். அதனால் தர்ம தரிசன வரிசையில் நிற்பவர்கள் கயிற்றைத் தள்ளித் தள்ளி  நம்மைச் சுவரோடு தேய்க்கிறார்கள். கோயில் நிர்வாகம் அங்கு நமது கோயில்களில் இருப்பதைப் போல் கம்பி கிராதி போட்டால் இந்த பிரச்சினையைத் தவிர்க்கலாம். முட்டி மோதிக் கொண்டு உள்ளே நுழைந்தால் நடுவில் கேதாரநாதர். சுற்றிலும் கல் தூண்களில் விளக்குகள். இரண்டுக்கும் நடுவில் இரண்டு பேர் செல்லும் அளவிற்குத் தான் இடம். வட இந்தியாவில் இறைவனின் திருவுருவச் சிலையைக் கையால் தொட்டு பால் அபிஷேகம் செய்வது அங்குள்ளவர்களின் பழக்கம். அதனால் அனைவரும் நெருக்கி அடித்துக் கொண்டு கேதார நாதரை ஸ்பர்சிக்க விழைகின்றனர். பண்டாக்கள் கூட்டம் வேறு.  அந்த தள்ளு முள்ளிலும் கூட ஒரு பண்டா எங்களுக்கு மந்திரம் சொல்லி ஈசனுக்கு அபிஷேகம் செய்வித்து அர்ச்சனை செய்யவும் வைத்தார், ஜோதிர்லிங்கத்தை ஸ்பர்சிக்கும்போது மின் அலை ஓடுவதைப் போல் ஓர் உணர்வு. வார்த்தைகளால் அதை விவரிக்க இயலாது. 1100 ரூபாய் டிக்கெட்  வாங்கியவர்களுக்கு ஒரு ருத்ராக்ஷ மாலையும் சர்க்கரை மிட்டாய் பிரசாதமும் தருகிறார்கள். கோயிலை வலம் வரும்போது நேர் பின்னால் ஒரு பெரிய பாறை இருப்பதைப் பார்த்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது இந்தப் பாறை மலை உச்சியிலிருந்து உருண்டு வந்து கோயிலின் நேர் பின்புறம் நின்று விட்டதாம் . அதனால் அடித்துக் கொண்டுவந்த வெள்ளநீர் கோயிலுக்குச் சேதம் விளைவிக்காமல் பாறையின் இரண்டு புறத்தின் வழியாக  வெளியேறி விட்டதாம். 

                  சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு ஹெலி பேட் வந்த போது அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. 5 பேர் சேர்ந்த பிறகுதான் ஹெலிகாப்டர் கிளம்புகிறது.  பதினொரு மணிக்கெல்லாம் குப்தகாசியில் ஹோட்டல் அறைக்குத் திரும்பி விட்டோம். எங்கள் ஓட்டுனர் கௌரி குண்ட் அழைத்துப் போவதாகச் சொன்னார். அங்கிருந்து 15 கிலோமீட்டர்   தொலைவில் உள்ளது. உமையம்மை ஈசனை மணப்பதற்காக தவம் இருந்த தலம் இது.  சிறிய கோயில் இதுவும் வெள்ளத்தினால் பாதிக்கப்படவில்லை . அருகில் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. கால்நடையாக கேதார் நாத் செல்வோர் கௌரி குண்டில் குளித்துவிட்டு தங்கள் பயணத்தைத் தொடக்குகிறார்கள்.  மாலையில் குப்தகாசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றோம். குருக்ஷேத்திர போருக்குப் பின்னால் பாண்டவர்கள்   சிவ பெருமானை சந்தித்து பாபவிமோசனம் பெற விரும்பினார்களாம். ஆனால் உறவினர்களைக் கொன்றதால் அவர்கள் மீது கோபம் கொண்ட ஈசன் அவர்களைச் சந்திக்க விரும்பாமல் மறைந்து கொண்ட இடம் தான் குப்த காசி என்று அழைக்கப்படுகிறது   என்றார் அங்கிருந்த அர்ச்சகர். காளை வடிவில் இருந்த பெருமானை அறியாமல் பீமன் அதன் வாலை பிடித்து முறுக்க முகப்பகுதி நேபாளத்திலும் பின்பகுதி கேதார்நாத்திலும் போய் விழுந்தனவாம். கேதார்நாத்தில் உள்ள லிங்கம் காளையின் முதுகு போன்று முக்கோண வடிவில் காட்சி அளிப்பதன் தாத்பர்யம் இது என்று அவர் கூறினார்.
 
ஐந்தாம் நாள்
புலாவா என்று ஹிந்தியில் சொல்வார்கள் . கடவுள் அழைத்தால்தான் நாம் அவரை தரிசிக்க முடியும். நம் முன்னோர்கள் செய்த புண்ணியம்தான் நமக்கு இந்த இரண்டு தலங்களுக்கும் சென்று இறைவனை தரிசிக்க முடிந்தது என்ற நினைப்புடன் குப்தகாசியை விட்டு புறப்பட்டோம் . வழியில் ஐந்தாவது பிரயாகையான ருத்ர பிரயாகையில் மறக்காமல் எள்ளும் நீரும் இறைத்து விட்டு ரிஷிகேஷ் வழியாக ஹரித்வார் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். நான்கு நாட்களாக குளிர் பிரதேசத்தில் இருந்து விட்டு ஹரித்வார் வெயில் சுட்டெரிப்பது போல் இருந்தது. மாலை சதாப்தி ரயிலில் ஏறி தில்லி வந்து சேர்ந்தோம். எங்கள் யாத்திரை இனிதே நிறைவு பெற்றது.

                     ஜெய் பத்ரி விஷால் ஜெய் கேதார்நாத்